கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் - தேசிய நெடுஞ்சாலையையொட்டி தகரம் வைத்து தடுப்பு அமைப்பு :

கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக, அதையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையோரமாக 500 மீட்டர் தொலைவுக்கு தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் இந்தோ திபெத் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, உள்ளூர் போலீஸார் என சுமார் 250 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (மே 2) வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் நிலையில், இம்மையம் கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாக்கு எண்ணும் மையமான எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி தெரியாத வகையில் 500 மீட்டர் தொலைவுக்கு 15 அடி உயரத்தில் தகரம் வைத்து அடைக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை இருப்பதால், கட்சியினர் கூடுவதை தவிர்க்கவும், வாகனங்களை நிறுத்தாமல் இருக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பேரிகார்டுகள் மூலம் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் பணியையொட்டி சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE