நாளை (மே 2) ஊரடங்கு என்பதால் வாக்கு எண்ணும் மையத்தில் பணி புரிய உள்ள ஊழியர்களுக்காக தேனி யில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படும் என்று மாவட்டத் தேர்தல் அலு வலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய தொகுதி களின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள் 3 பேர், 12 ஆய்வாளர்கள், 18 சார்பு ஆய்வாளர்கள், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 72 வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 29 பேர் மற்றும் மாவட்ட காவலர்கள் 130 பேர் என மொத்தம் 1,200 பேர் சுழற்சி முறையில் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத் தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: தபால் வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கும் தொடங்க உள் ளன. இப்பணிகளைக் கண்காணிக்க 4 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய தொகுதிகளுக்கு 28 சுற்றுகளிலும், பெரியகுளம் தொகுதிக்கு 29 சுற்று களிலும் வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கையை கண் காணிக்க தொகுதிக்கு 30 கேமராக்கள் வீதம் 120 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் செலுத்திய மின்னணு தபால் வாக்குகளை எண்ண 24 க்யூஆர் ஸ்கேனர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் காலை 6 மணிக்கு படிவம்-18 மற்றும் அடை யாள அட்டையுடன் வர வேண்டும். மொபைல்போன் கொண்டுவர அனுமதியில்லை.
நாளை (மே 2) முழு ஊரடங்கு என்பதால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் வந்து செல்ல வசதியாக அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். வாக்கு எண்ணும் மேஜையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண்பார்வையாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியில் இருப்பார்கள்.
கரோனா தொடர்பான அரசு வழி காட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago