நீலகிரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு - கரோனா பரிசோதனை 2000-ஆக உயர்த்தப்படும் : ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை 2000-ஆகஉயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

கரோனா தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த சுற்றுலா வழிகாட்டிகள் 115 பேருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளப்மகேந்திரா நிறுவனம் சார்பில்அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுபரவலால் சுற்றுலா பயணிகள்வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வழிகாட்டி கள், சாலையோர வியாபாரிகள், கேப் ஓட்டுநர்கள் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையோர வியாபாரிகள் 100 பேருக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. அதேபோல, சுற்றுலா வழிகாட்டிகள் 115 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவ, தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனாதொற்று பரிசோதனை, தற்போது ஒரு நாளைக்கு 1200-ல் இருந்து1300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 2000-ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில்பணிபுரிய உள்ள அலுவலர்கள்,பணியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தின் எல்லையையொட்டி கேரளா, கர்நாடகா மாநிலங்கள் உள்ளன. தற்போது, கர்நாடகாவில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வணிக ரீதியாக வரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், எல்லையோரசோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

உதகை சார்-ஆட்சியர் மோனிகா ரானா, மண்டல மேலாளர் வெங்கடேசன், உதகை வட்டாட்சியர் குப்புராஜ், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி மற்றும் கிளப் மகேந்திரா நிறுவன மேலாளர்கள் இளையராஜா, விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்