வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளர், வேட்பாளரின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (மே 2-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும், என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நேற்று நாமக்கல், திருச்செங்கோடு என மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஏராளமானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் காவல் துறையினர் அனைவரையும் ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் பரிசோதனை மேற்கொள்ளும்படி செய்தனர்.
ஈரோட்டில் பரிசோதனை
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற 128 வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், மற்றும் ஓட்டு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை முகாம் பல்வேறு இடங்களில் நடந்தது.இதில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகளின் அடிப்படையில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லவுள்ள பத்திரிகையாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago