திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் 2 நாள் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் 45 வயதை கடந்த சுமார் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இச்சூழலில், திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் 2 நாள் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
33 நடமாடும் வாகனங்கள், 33 மருத்துவக் குழுக்கள் மூலம் மக்கள் தொகை அதிகம் உள்ள ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய நகராட்சிகள், திருநின்றவூர், மீஞ்சூர் ஆகிய பேரூராட்சிகள், அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், ஈக்காடு ஆகிய ஊராட்சிகளில் இம்முகாம் தொடங்கியது.
இந்த சிறப்பு முகாமில், நேற்று மட்டும் 2,261 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகர் பகுதியில் நடந்த சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி பணியைமாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இன்றும் (ஏப். 30) தொடர உள்ள இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தடுப்பூசி போட வருவோர்தங்களது ஆதார் அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago