மருத்துவர்களை அவதூறாக பேசிய போலீஸாரை கண்டித்து - ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பரமக்குடி கரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவர் களை டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மணிகண்டன் (28), விக்னேஷ் (28) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்துவிட்டு, பரமக்குடி பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்கியுள்ளனர்.

அப்போது ரோந்துப் பணியில் இருந்த பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் போலீஸார், மருத்துவர்கள் விலை உயர்ந்த பைக்குடன் அடையாள அட்டை இன்றி இருந்ததால், காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் இருவரையும் அனுப்பி வைத்த னர்.

இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களை அவதூறாகப் பேசிய டிஎஸ்பி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் மலையரசு தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மனோஜ்குமார், இந்திய மருத்துவ சங்கச் செயலாளர் ஆனந்த சொக்கலிங்கம், துணைத் தலைவர் சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் அக்நெலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் புறக் கணித்தனர்.

இதேபோல், பரமக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் பரமக்குடி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகி முத்தரசன் தலைமை வகித்தார்.

இந்திய மருத்துவ சங்கக் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மருத்துவர்களை அவதூறாகப் பேசிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்