கூடுதலாக பெய்த வடகிழக்குப் பருவமழை - பலாப்பழம் விளைச்சல் குறைவு :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடந்த ஆண்டு கூடுதலாக பெய்த வடகிழக்குப் பருவமழையால் பலாப்பழம் விளைச்சல் குறைந் துள்ளது.

ஆலங்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், கீரமங்கலம், செரியலூர், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் உள்ள பலா மரங்கள் ஆழ்துளை கிணற்று நீர் பாசனம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதி விவசாயிகள் தங் களது மரங்களில் உள்ள பழங்களை பறித்து வடகாடு, மாங்காடு, புளிச்சங்காடு- கைகாட்டி, கீரமங்கலம் போன்ற இடங்களில் உள்ள மண்டிகளில் விற்பனை செய்வர்.

அங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்.

நிகழாண்டில் பலாப் பழம் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மலிவு விலைக்கு பலாப்பழம் கிடைக்கவில்லை. கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்பட்டால் கடந்த ஆண்டைப்போல, பலாப் பழத்தை விற்க முடியாத நிலை ஏற்படுமோ என விவசாயி கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பலாப்பழ வியாபாரி மாங்காடு ஆர்.சிவகுமார் கூறியது: காய்ச்சலும், பாய்ச்சலுமாக விளைவிக்கப்படும் இப்பகுதி பலாப்பழங்கள் மற்ற மாவட்டங்களில் விளையும் பழங்களைவிட அதிக ருசி கொண்டதாக இருப்பதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஆண்டுக்கு 7 மாதங்கள் பலாப்பழம் விளையும். ஆனால், கோடை சமயத்தில் அதாவது, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 3 மாதங்களில் அதிகமாக விளையும். இதனால், குறைந்த விலைக்கு பழம் கிடைக்கும் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவர்.

ஆனால், கோடையில் தினசரி 2,000 டன் வீதம் விற்பனைக்கு வரவேண்டிய பலாப்பழம் இந்த ஆண்டு 1,000 டன்னுக்கும் குறைவாகவே வருகிறது. விலையும் குறையாததால் மலிவான விலைக்கு பலாப்பழம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனா பரவலால் முழு ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பழங்களை சந்தைகளில் விற்க முடியவில்லை.கோயில் திருவிழாக்கள் நடத்தப்படாததால் அங்கும் விற்பனை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ல் கஜா புயலால் மரங்கள் முறிந்ததால் மறு ஆண்டு முற்றாக விளைச்சல் தடைபட்டது. அதற்கு அடுத்த ஆண்டு (2020) வழக்கம்போல விளைந்தது. ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த வகையில் காய்ப்பு இல்லை.கடந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை மேலும் 1 மாதம் கூடுதலாக பெய்ததாலும், புயலில் பாதிக்கப்பட்ட மரங்களில் கிளைகள் அதிகமாக வளர்ந்ததால் காய்ப்புத் திறன் குறைந்ததுமே விளைச்சல் குறைவுக்கு காரணம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE