முத்துப்பேட்டை அருகே 2 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையினர் 7 பேரை முத்துப்பேட்டையில் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலூரில் கடந்தபிப்.22-ம் தேதி ராஜேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய ஜெகன், அருண், அஜித் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
பின்னர், கடந்த மார்ச் 24-ம் தேதி கண்ணன் என்பவரை கோயம்புத்தூரில் கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் கூலிப்படையாக செயல்பட்டவர்களை 5 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலைமுத்துப்பேட்டை பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு கார் மற்றும் 4 இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். இதில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த சின்னத்துரை(28) ,பேட்டையைச் சேர்ந்த நாகராஜன்(26), தூத்துக்குடி மாவட்டம் இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த கொம்பையா(26), முத்துக்குமார்(28), வள்ளிமுத்து(20), இசக்கிமுத்து(எ) போஸ்(26), தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த வீரமணி(46) ஆகியோர் என்பதும், கோவிலூர் ராஜேஷ் கொலை வழக்கில் கூலிப்படையாக செயல்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 8 நாட்டு வெடிகுண்டுகள், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் ஒரு கார், 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த கூலிப்படையைச் சேர்ந்த மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கூலிப்படையினர் 7 பேரை கைது செய்த போலீஸாருக்கு திருவாரூர் எஸ்.பி கயல்விழி பாராட்டு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago