வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் ஊரக வளர்ச்சித் துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் களுக்கான கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தினசரி கரோனா பரிசோதனைகள் நடத்த வேண்டும். கரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்.
அப்பகுதியைச் சேர்ந்தவர் களுக்கு மருத்துவ முகாம் நடத்துதல், கபசுர குடிநீர் வழங்குதல், நிலவேம்பு கசாயம் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங் குதல், நோய் தடுப்பு உள்ளிட்ட பணி களை தீவிரப்படுத்த வேண்டும்.
அதேபோல, வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அதேபோல, அரசு மருத்துவ மனைகளில் கரோனா நோயாளிக ளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் கூடுதலாக அமைக்க வேண்டும். கரோனா சிறப்பு வார்டுகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். கரோனா அறிகுறி உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களை வேலூர் விஐடி பல்கலையில் உள்ள கேர் சென்டரில் தங்க வைத்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும்.
அவர்கள் ஓரளவுக்கு குணமடைந்த பிறகு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடு பணிகளை தொடங்க வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் செந்தாமரைகண்ணன், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், மாநகராட்சி ஆணையர் சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago