நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொள்கலனில் - 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வாரம் ஒருமுறை நிரப்ப நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலனை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் தேவைக்காக கடந்த ஆண்டு, மருத்துவமனை வளாகத்தில் அரசு சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 2-ம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளது.

அதுவரை நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 100 சிலிண்டர்கள் வரை லாரியில் எடுத்து வரப்பட்டு அதிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள வார்டுகளுக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டதால் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் வாரம் ஒரு முறை கொண்டு வரப்பட்டு நிரப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று குறைந்திருந்த காலக்கட்டத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை 10 ஆயிரம் லிட்டர்ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்தது.

தற்போது நாமக்கல்லில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் வாரம் ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கொள்கலனில் ஆக்சிஜன் அளவு மற்றும் அழுத்தத்தை கண்காணிக்கவும், அதனை மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்கவும் குழு அமைத்து நாள் ஒன்றுக்கு 3 முறை கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆக்சிஜன் கொள்கலன் செயல்படும் முறை, அதன் அழுத்தம் கணக்கீடு செய்ய உள்ள அமைப்புகள், அளவு கணக்கீடு செய்ய உள்ள கருவி மற்றும் ஆக்சிஜனை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் அளவு முறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்