செங்கல்பட்டு மாவட்டத்தில் - 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 242 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை :

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 242 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தாம்பரம், மதுராந்தகம், செங்கல்பட்டு அருகே தண்டலம் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் வரும் மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தும் நடைபெற்றுவருகின்றன. வாக்கு எண்ணிக்கைமையங்களில் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 28 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 991வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இங்கு 36 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. பல்லாவரம் தொகுதியில் 608 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 44 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன.

தாம்பரம் தொகுதியில் 576 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றதில் 42 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. செங்கல்பட்டு தொகுதியில் 597 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றதால் 43 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. திருப்போரூர் தொகுதியில் 417 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன.

மதுராந்தகத்தில் 319 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. செய்யூர் 325 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. மொத்தம் 7 தொகுதிகளில் 242 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்