திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் - குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண கோரிக்கை : கோடை காலத்தில் சிரமத்துக்கு ஆளாகும் மக்கள்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால், பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள், குடிநீர் வசதி இன்றி அவதிப்படும் சூழல் உள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள்கூறும்போது, "மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், வங்கி, தபால் நிலையம், ஆதார் மற்றும் இ-சேவைமையங்கள் என பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை. ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டியிலும் குடிநீர் வருவதில்லை. மேலும், நாள் முழுவதும் அந்த தொட்டி மீதுவெயில் படுவதால், கொதிக்க வைத்த நீர்போல குடிநீர் வருகிறது. இந்த தொட்டியில் பல்வேறு நேரங்களில் தண்ணீர் நிரப்பப்படுவதும் இல்லை.அதேபோல, தரைத் தளத்தில்கழிவறை முன்புறம் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால், குடிக்க தண்ணீர் இன்றி கஷ்டப்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, கண் பார்வையற்றவர்கள் உட்பட பல வகையான மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும்" என்றனர்.

சமூக ஆர்வலர் சே.பாலசுப்பிரமணியம் கூறும்போது, "ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் முகக் கவசம் அணியாமல் வரும்பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம்விதிப்பதை வரவேற்கிறோம்.

அதேசமயம், ஆட்சியர் அலுவலகத்தில் குடிக்க குடிநீர் இல்லாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? பல்வேறு தேவைகளுக்காக ஆட்சியர் அலுவலகம் வருபவர்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் உள்ளிட்ட விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார். திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் வராத குடிநீர். (அடுத்த படம்) தரைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் வராத குடிநீர் குழாய். படங்கள்: இரா.கார்த்திகேயன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்