சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு 3 தினங்களில் 4 மடங்காக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சராசரியாக 50-க்கும் மேற்ப்டடோர் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 2 தினங்களாக அதன் பாதிப்பு 100-க்கு மேல் இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் கரோனா பாதிப்பு 4 மடங்காக அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 4 இடங்களில் கரோனா வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இதர அறுவை சிகிச்சை பிரிவு வார்டுகளும் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் கரோனா பணிக்கு மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என, பாஜகவைச் சேர்ந்த கா.கருப்பையா என்பவர் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை 4-து வார்டு ரயில் நிலையம் எதிரே உள்ள தெருவில் கரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி ஊழியர்கள் முறையாக ஈடுபடவில்லை. துப்புரவு பணிகளும் சரியாக நடக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago