குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவை அரசு விதிகளின்படி நடத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கவுன்டன்யா ஆற்றின் கரையில் பிரசித்திப் பெற்ற கெங்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி 1-ம் தேதி நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக சிரசு திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரம், அரசின் உத்தரவுப்படி பக்தர்கள் இல்லாமல் கோயில் வளாகத்தில் வழக்கமான நடை முறைகளின்படி அம்மன் சிரசு ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்தாண்டு கெங்கையம்மன் திருவிழா வைகாசி 1-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. திருவிழாவுக்காக கடந்த மார்ச் 24-ம் தேதி கோயிலில் பால்கம்பம் நடப்பட்டது.
மேலும், முக்கிய நிகழ்வான காப்பு கட்டுதல் நிகழ்வு வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், கரோனா இரண்டாம் அலை ஊரடங்கு அறிவிப்புகள் வெளியான நிலையில் கோயில் விழாக்கள், குடமுழுக்கு நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால் இந்தாண்டும் சிரசு திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருவிழாவின் காப்பு கட்டுதல் நிகழ்வையும் சிரசு திருவிழாவையும் எளிமையான முறையில் அரசு விதிகளின்படி நடத்த அனுமதிக்க வேண்டும் என கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கோபாலபுரம் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அப்போது, கோபாலபுரம் கவுரவ தர்மகர்த்தா பிச்சாண்டி, நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ்.சம்பத் மற்றும் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago