திருப்பத்தூர் மாவட்டத்தில் - தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பயிற்சி : வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் விளக்கம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பாலான பகுதிகளில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கு தல் காணப்படுவதால் அதன் பாதிப்பில் இருந்து மீள்வது குறித்தும், சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10,399 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பருவ நிலை காரணமாக தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்தவும், சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் பேசும் போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் தற்போது அதிகரித்தாலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் சுருள் வெள்ளை ஈக்களின் இனப் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.

தென்னை இலைகளின் அடிப்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். முட்டைகளை மெழுகு போன்ற சுருள் வெள்ளை நிற துகள்கள் மூடியிருக்கும். இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சியடைந்த சுருள் வெள்ளை ஈக்கள் சாற்றை உறிஞ்சும் தன்மையுடையது.

சுருள் வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட அடுக்கு இலை களில் மேல்பகுதியில் விழுந்து பரவும். அதுவே, நாளடைவில் திரவத்தின் மீது கரும்பூசணம் வளர்வதால் தென்னை ஓலைகள் கருப்பு நிறமாக மாறிவிடும்.

இதனால் ஒளி சேர்க்கை பாதிக்கப்பட்டு மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். பாதிக்கப்பட்ட இலைகள் மீது எறும்புகள் அதிகமாக காணமுடியும். சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் மகசூல் அதிக அளவில் பாதிக் கப்படும். பாதிப்படைந்த மரங் களின் இலைகள் கருப்பு வண்ணத்தில் காய்ந்தது போல் இருக்கும்.

விளக்கு பொறி..

எனவே, இதை கட்டுப்படுத்த விளக்கு பொறிகளை ஓர் ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7 முதல் 11 மணி வரை ஒளிரச்செய்து இரவில் சுருள் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய்யை தடவிய பொறிகளை 5 அடி நீளம் ஒன்றரை அடி அகலத்தில் ஒட்டுப்பொறிகளை ஏக்கருக்கு 10 வீதம் 6 அடி உயரத்தில் தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே கட்டி வைத்தால் சுருள் வெள்ளை ஈக்கள் அழியும்.

தென்னை மரத்தில் 4 அடி உயரத்தில் மஞ்சள் நிற பெயின்ட் அடித்து அதில் ஆமணக்கு எண்ணெய்யை தடவினால் சுருள் வெள்ளை ஈக்கள் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும். சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளில் அடிப் பகுதியில் படுமாறு தண்ணீரை விசைத்தெளிப்பான் மூலம் அடித் தால் வெள்ளை ஈக்கள் அழியும்.

தென்னையில் ஏற்படும் கரும் பூசணத்தை கட்டுப்படுத்த 1 கிலோமைதா மாவை 5 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பசையாக்கி அதனை 20 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் 20 மில்லி சேர்த்து கீழ் இலை அடுக்குகளில் படிந்திருக்கும் கரும்பூசணங்கள் மேல் நன்றாக தெளித்தால் 3 முதல் 5 நாட்களில் இலைகளில் படிந்திருக்கும் கரும்பூசணம் வெயிலில் காய்ந்து உதிர்ந்துவிடும்.

அதேபோல, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்ப எண்ணெய்யுடன் 1 மில்லி திரவம் கலந்து தெளித்து பூச்சியை கட்டுப்படுத்தலாம். செயற்கை பைரித்திராய்டு மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள், பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிடுவதால் அவற்றை பயன்படுத்தக்கூடாது.

தென்னந்தோப்புகளில் மஞ்சள் நிறப்பூக்கள் பூக்கக்கூடிய சணப்பு, செண்டுமல்லி, காராமணி போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டுகள், கண்ணாடி இயற்கை பூச்சிகள் இயற்கையாகவே பெருகுவதால் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப் படுத்தும்.

எனவே, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தென்னை மகசூலை அதிகரித்து வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும்’’என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குநர் அப்துல்ரகுமான், வேளாண் அலுவலர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்