மர்ம நோயால் இறந்த - கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட நென்மேலி, காங்கேயன் குப்பம், அழகுசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மர்ம நோயால் 300-க்கும்மேற்பட்ட வெள்ளாடுகள், குட்டிகள் இறந்தன.

இதுகுறித்து அழகுசமுத்திரம் கால்நடை மருத்துவமனையில் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உரிய மருத்துவ முகாம் நடத்தவும், இறந்த வெள்ளாடு ஒன்றுக்கு ரூ.10 அயிரம் இழப்பீடு வழங்குமாறும் முறையிட்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ முகாம் மட்டும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளர் இ.கோதண்டன் தலைமையில், செங்கல்பட்டு கால்நடைத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தப்பட்டது.

இறந்த ஆடு ஒன்றுக்கு ரூ.10 அயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அழகுசமுத்திரம் கால்நடை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் மருத்துவமனையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஸ்கேன் வசதி தேவை

கால்நடை வளர்க்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய பயிற்சி வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான அவசர ஊர்தி வசதி செய்ய வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட தலைமை கால்நடை மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் மருத்துவக் கருவிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, மாவட்ட செயலாளா் ஜி.மோகனன், மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளா் எம்.குமார், விவசாயிகள் சங்கத்தின் வட்ட துணைச் செயலாளா் அழகேசன் உட்பட பலர் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்