அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தின் அருகே புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட யானை சிலையை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கம் பணி நடைபெற்று வருகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த சலுப்பை கிராமத்தில் காவல் தெய்வமாக துறவுமேல் அழகர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முகப்பில் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட யானை சிலை உள்ளது. இந்த சிலை 41 அடி நீளம், 12 அடி அகலம் மற்றும் 60 அடி உயரம் கொண்டதாகும்.
நின்றபடி உள்ள இந்த யானை சிலையின் கால்களுக்கு இடையே 3 பேர் தாளமிடும் கோலத்திலும், உள்பக்கத்தில் தும்பிக்கையை தாங்கி ஒருவரும், அவருடைய கால்,யானையின் காலடியில் சிக்கி இருப்பது போன்றும் உள்ள இந்த சிலை ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிலை. இத்தகைய சிறப்புவாயந்த யானை சிலையை தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த யானை சுதை சிலையை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக அண்மையில் அறிவித்து பாதுகாத்து வருகின்றது.
இந்நிலையில், இந்த சிலையை பாதுகாக்கும் வகையில், சிலையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தொல்லியல் துறை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறது.
இந்த யானை சிலை உள்ள கிராமத்துக்கு செல்லும் குறுகலான சாலையில் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளதால், சாலையை விரிவுப்படுத்த வேண்டும். யானை சிலை அருகே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago