செங்கல்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் - மீண்டும் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் அதிக அளவில் நெல் விவசாயம் செய்தனர். தற்போது, அறுவடை காலம் என்பதால் மாவட்டம் முழுவதும் அவர்கள் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசு நெல் கொள்முதல் செய்து வருகின்றது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாக இருப்பதால், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் இருந்து அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்லியம்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்த விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் இரவு நேரங்களில் நெல்லை கொண்டுவரச் சொல்லி அவற்றை மறுநாள் காலையில் முதலில் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர். இதனால் சிறு குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆட்சியர் எச்சரிக்கை

கடந்த 2 மாதங்களுக்கு முன் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஊராட்சியில் வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு உதவிய கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்ததுடன், 'இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் போதிய அளவிலான நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் அமைக்கவில்லை. இருக்கும் இடத்திலும் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். டோக்கன் படி நெல்லை கொள்முதல் செய்வதில்லை. வியாபாரிகளுக்கு துணைபோகும் அதிகாரிகளின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்