கரோனா அச்சத்தால் ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் : ஈரோடு ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்

By எஸ்.கோவிந்தராஜ்

கரோனா பரவல் அதிகரிப்பதோடு, ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள், ஜவுளி, விசைத்தறி தொழில், கட்டிட வேலை, சாய, சலவைத் தொழிற்சாலைகள், நூற்பாலைகளில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது, சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களில் பலர் மீண்டும் ஈரோடு திரும்பி பணிபுரியத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதோடு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து தொழிற்சாலைகள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. தீவனத் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதும் தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வடமாநிலத் தொழிலாளர்கள், கடந்த ஒரு வாரமாக சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால், ஈரோடு ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதும், சிறப்பு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இதனால், ஈரோடு ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு முதலே வடமாநிலத்தவர்கள் வந்து குவியத் தொடங்கினர். இன்று காலையும் சிலர் கால்நடையாக நடந்து வந்து காத்திருந்து ரயில்களில் முன்பதிவு செய்து குடும்பத்துடன் ஊர் திரும்பினர்.

இதுதொடர்பாக ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் நூற்பாலைகள், கட்டுமானப்பணி, சிப்காட் தொழிற்சாலைகள், தீவனத் தொழிற்சாலை, ஸ்டீல் தொழிற்சாலைகள் என பல்வேறு பணிகளில் 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், இவர்களின் எண்ணிக்கை, எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற புள்ளிவிவரம் சேகரிக்கப்படவில்லை. இவர்களில் பலர் அந்தந்த தொழிற்சாலைகளிலேயே தங்க வைக்கப்பட்டு, பணி புரிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலை தாக்கத்தின்போது, இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இங்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து கொல்கத்தா வரை சைக்கிளிலேயே பயணித்து செல்வதற்கு கூட சில தொழிலாளர்கள் முயற்சித்த சம்பவம் நடந்தது. இவ்வாறு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களில் பாதிபேர் வரையே திரும்பி வந்துள்ளனர். கடந்த ஆண்டு அனுபவம் காரணமாக தற்போது முன்கூட்டியே ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டம் உள்ளது. அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களில் சிலர் தமிழக அரசின் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அரசின் சில உதவிகள் கிடைக்கின்றன.

இது தவிர அந்தந்த தொழிற்சாலை நிர்வாகங்களுடன் பேசி, புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரியுள்ளோம். சிலர் அதனை நிறைவேற்றியுள்ளனர். திருப்பூர் எம்பி சுப்பராயனும், இது தொடர்பாக அரசிடம் பேசி சில முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்