ஏற்காடு வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால், உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டெருமைகள் மலைக்கிராமங்களுக்கு வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஏற்காடு பிரதானமாக விளங்குகிறது. ஏற்காடு மலையில் 65 கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்காடு மலைப்பகுதியில் காட்டெருமைகள், மான், கீரி, நரி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இங்குள்ள காஃபி எஸ்டேட்டில் மிளகு ஊடு பயிராக விளைவிக்கப்படுகிறது. பேரிக்காய், சாத்துகுடி, தேக்கு, சந்தனம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகிறது.
கோடை காலம் தொடங்கிய நிலையில், ஏற்காடு மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டை, தடுப்பணைகளில் தண்ணீரின்றி இருப்பதால், வன விலங்குகள் தண்ணீரை தேடி அவ்வப்போது ஊருக்குள் வருகிறது.
தற்போது, கடும் வறட்சியால் ஏற்காடு குண்டூர், ஜரீனாகாடு, கரடியூர், நாகலூர், வாழவந்தி உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டெருமைகள் புகுந்து மக்களை அச்சமடைய செய்து வருகிறது.
இதுதொடர்பாக ஏற்காடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது, “ஏற்காடு மலைப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை வனத்துறையினர் நிரப்பினால், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும். எனவே, வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராம மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதேபோல, ஏற்காடு அடிவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குரங்குகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. குறிப்பாக குரங்குகள் கொண்டப்பநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சி பகுதிகளில் சுற்றி வருவதோடு வீடுகளின் மொட்டை மாடிகளிலும், பால்கனிகளிலும் புகுந்து வீட்டுக்குள் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துச் செல்கிறது. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்களை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago