தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் 7,255 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் உணவகங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு பணி பாதுகாப்பு, குடியிருப்பு வசதிகள் உள்ளதால், அவர்கள் இங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
பிற பணிகளில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட், மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,470 பேர், கடந்தாண்டு கரோனாவால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
பொதுமுடக்க தளர்வுகளுக்குப் பின்னர் நீலகிரி மாவட்டத்துக்கு சிலர் மட்டும் திரும்பினர். தற்போது மீண்டும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். சுற்றுலா தலங்களை நம்பி நீலகிரி மாவட்டத்தில் தங்கிப் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பலரும், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி வருவதால், உதகை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago