வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் 6 எண்ணிக்கையில் முகக்கவசம், முகம் முழுவதும் மறைக்கும் வகையிலான முழுக்கவசம் ஒன்று, கிருமி நாசினி திரவம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி மே 2-ம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
வாக்குப் பதிவின் ரகசியம் தொடர்பான உறுதிமொழி வாக்கு எண்ணும் தினத்தன்று காலை 7.55 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் ஏற்கப்படும். தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கும். தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி வாரியாக வாக்குகளை எண்ணுவதற்காக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் 20 சதவீதம் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணும் நாளன்று அதிகாலை 5 மணியளவில் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் மேசைவாரியாக வாக்கு எண்ணும் அலுவலர்களைத் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.
கட்டுப்பாட்டு இயந்திரம் அடங்கிய பெட்டி மேசைக்கு வரப்பெற்றவுடன் கருவியில் ஏற்கெனவே சீல்கள் வைக்கப்பட்டுள்ளதை வேட்பாளர்கள், முகவர்களிடம் காண்பித்து உறுதி செய்யவேண்டும்.
மேலும், 17 சி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டு கருவியில் தெரியும் வாக்குகளின் எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பேட்டரி சார்ஜ் இல்லாமல் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலோ அதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் 6 எண்ணிக்கையில் முகக்கவசங்கள், முகம் முழுவதும் மறைக்கும் வகையிலான முழுக்கவசம் ஒன்று, கிருமி நாசினி திரவம் ஆகியவை வழங்கப்படும். வாக்கு எண்ணும் அலுவலர்கள் தங்கள் பணியை சரியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago