செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உரங்களை பதுக்கிவைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிஏபி உள்ளிட்ட உரங்களுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியதால், விலை உயர்த்தப்பட்டது. இதற்குவிவசாய அமைப்பினர் தொடர்ந்துஎதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உரத்தைப் பதுக்கிவைத்து, அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது, "மத்தியஅரசு மானியத்தை ரத்து செய்ததை சாதகமாக்கி, வியாபாரிகள் சிலர் பழைய உரங்களை, புதிய விலையில் விற்பனை செய்கின்றனர். மேலும், உரங்களை பதுக்கிவைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகள் உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, பழைய மற்றும் புதிய விலையை உறுதிப்படுத்த வேண்டும். கடைகளில் விவசாயிகள் பார்வையில்படும்படி விலைப்பட்டியலை வைக்க உத்தரவிட வேண்டும்" என்றனர்.
உரிய ரசீதுடன் விற்பனை
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ், கூறும்போது, "செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதுமான அளவுக்கு உரங்கள்இருப்பு உள்ளது. உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல், உரிய ரசீதுடன் விவசாயிகளுக்கு விற்கவேண்டும். விவசாயம் அல்லாதபயன்பாட்டுக்கு, குறிப்பாக தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு உரம் விற்பனை செய்தாலோ, அதிகவிலைக்கு உரங்களை விற்பனை செய்தாலோ அல்லது உரிய ஆவணங்களின்றி விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கடை உரிமையாளர்கள், உரம்இருப்பு மற்றும் விலை விவரம்அடங்கிய தகவல் பலகையை கட்டாயம் பராமரிக்க வேண்டும். உரமூட்டைகள் மீது அச்சடிக்கப்பட்டுள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இது தொடர்பான புகார்களை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்களிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago