- பொதுஇடங்களில் புகைப்பிடிப்பவருக்கும் அபராதம் : மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

முகக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் விதிப்பது போல்பொது இடங்களில் புகைப்பிடிக்கும் நபருக்கும் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகைப்பிடித்தல் பல வழிகளில் நுரையீரலை பாதிக்கிறது. நுரையீரல் தொற்று, ஆஸ்துமாவில் தொடங்கி புற்றுநோய் வரையில் பல நோய்கள் அதில் அடங்குகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், புகைப்பிடிப்போரை கண்டறிந்து தடுக்க முடியாத நிலையே தொடர்கிறது. ஏற்கெனவே, தனிப்படை அமைத்து, பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது வழக்குப் பதிவு செய்யசென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில், பேருந்து நிறுத்தம், மருத்துவமனை ஒட்டிய பகுதிகள், பூங்கா, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல பகுதிகளில் பலரும், புகைப்பிடித்து வருகின்றனர். தற்போது, கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழலில், இந்தப் புகை காற்றில் கலப்பது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

முகக்கவசம் அணியவில்லை என்றால் தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, சுகாதாரத் துறை சார்பில் புகைப்பிடிப்பதைத் தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குழு செயல்படுவதாகத் தெரியவில்லை. எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும்அவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொது இடங்களில், புகைப்பிடிப்போர், சுற்றியிருக்கும் சிறுவர், முதியோர், பெண்கள் என அனைவருக்கும் தீங்கு விளைவிக்கின்றனர்.

தவிர, புகைப்பிடிப்பதிலும், புகைப்பவர்கள் மற்றும் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல்தான். மேலும், அந்தஇடத்தில் எவரேனும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்து, முகக்கவசம் அணியாமல் தும்மினாலோ, இருமினாலோ அதன் வழியாக வெளிப்படும் வைரஸ் சுற்றியிருப்பவர்களைத் தாக்கும்.

மேலும், புகைப்பிடிப்போர், விரல்களில் சிகரெட்டுகளை வைத்துக் கொண்டு வாய் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். வைரஸ் கையில் இருந்தால், வாய்க்குள் செல்வதற்கான வாய்ப்புஅதிகமாகிறது.புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்கெனவே நுரையீரல் நோய் இருக்கலாம். அதன் செயல் திறன் குறைந்தும் இருக்கலாம். இது நோய்க்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். முகக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் விதிப்பது போல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் நபருக்கும் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்