புதுக்கோட்டை மாவட்டத்தில் - தயார் நிலையில் 512 ஆக்சிஜன் படுக்கைகள் : மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 512 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் நேற்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தினமும் ஒன்றியத்துக்கு 6 காய்ச்சல் முகாம் வீதம் 78 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் 2,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் முடிவுகளை 24 மணி நேரத்தில் வழங்குவதுடன், 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் 04322 -222207 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தி அச்சத்தை போக்குதல், மனநல ஆலோசனை வழங்குதல், கரோனா உறுதியானவர் களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 12,000 லிட்டர் ஆக்சிஜன் டேங்க் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் 12,000 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இதுதவிர, அரசு மருத்துவமனை களில் 359 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 512 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன.

புதுக்கோட்டை அரசு பிற்படுத்தப் பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, அறந் தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி, குடுமி யான்மலை வேளாண் பண்ணை போன்ற இடங்களிலும் கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.

ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி, கோட் டாட்சியர் டெய்சிகுமார், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் ராஜ்மோகன், நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்