நாளொன்றுக்கு கரோனா தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கையை - 7,000 ஆக உயர்த்த காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கையை 4 ஆயிரத்தில் இருந்து7 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா அதிகம் பரவி வருகிறது.இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்களின் தலைவர்கள், பொறுப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருகி வரும்கரோனா தொற்றை கட்டுப்படுத்த தனிநபர் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசனி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி நபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் தற்போது நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதனை 7 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைப் பகுதி, பல்பொருள் அங்காடி, மற்றும் ஜவுளிக்கடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் வட்டங்கள் அளவில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் சுகாதாரத் துறை, வருவாய் துறை, உள்ளாட்சி மற்றும் காவல் துறை உள்ளடங்கிய சிறப்புக் குழுக்களை அமைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் கே.மணிவண்ணன், எம்.நாராயணன், ஏ.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) ஜீவா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக 300-க்கும் குறைவாக இருந்த கரோனா தொற்று நேற்று முன்தினம் 392-ஆக அதிகரித்து. நேற்று இது 395-ஆக உயர்ந்தது. தினந்தோறும் கரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்