பாளை சிறையில் கொலையான கைதியின் - உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்ய வழக்கு :

By செய்திப்பிரிவு

பாளை சிறையில் கைதிகள் இடையே நடைபெற்ற மோதலில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யைச் சேர்ந்த பாபநாசம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பாளையங்கோட்டை சிறை கைதி முத்து மனோ மற்றும் அவரது நண்பர்களை வேறு கைதிகள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்து மனோ நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். முத்து மனோவின் உடல் கூராய்வை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

சிறையில் கலவரம் நடைபெறும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்ட சிறைத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், முத்துமனோ கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஜி.இளங்கோவனிடம் வழக்கறிஞர் கருணாநிதி நேற்று கோரிக்கை வைத்தார். அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், முத்து மனோ கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதித் துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலையில் தொடர்புடையவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து இந்த மனுவை ஏப். 26-ல் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE