பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் கீழக்குடிகாடு கிராமத்தில் வெள்ளாற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து நன்னை, வேப்பூர், அகரம்சீகூர் உட்பட 72 பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழக்குடிகாடு, லப்பைக் குடிகாடு, பெண்ணகோணம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ராட்சத ஆழ்துளை தண்ணீர் உறிஞ்சும் குழாய் அமைத்தால் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும். மேலும், கீழக்குடிகாடு பகுதி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்ய வில்லை. இத்திட்டத்தால் பயன் பெறும் கிராமங்களில் ஆழ்துளை குழாய் அமைத்து தண்ணீர் எடுக்காமல், இத்திட்டத்தால் பயன்பெறாத கிராமத்தில் தண்ணீர் எடுக் கும் முடிவை கைவிட வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கீழக்குடிகாட்டில், திருமாந் துறை-அகரம் சீகூர் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago