இரவுநேர ஊரடங்கால் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், அதிகாலையில் அதிகப்படியான வாகனங்கள் நிற்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இரவு நேரத்திலேயே ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அப்பகுதிகளில் விளையும் எள், கடலை, உளுந்து, சோளம், மிளகாய் உட்பட பல்வேறு வகையான தானியப் பொருட்களை விவசாயிகள் இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வந்து, கூடத்தின் உள்ளே வைத்திருந்து காலையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வந்தவுடன் விற்பனை செய்வார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக தற்போது இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், இரவு 10 மணிக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முகப்பு கதவு பூட்டப்பட்டு காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இதனால், விவசாயிகள், தற்போது அதிகாலையில் ஒரே நேரத்தில் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வருவதால், சாலையில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதன்காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், அங்கு கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மேற் கொள்ளப்படுவதால், தானியங்கள் எடைபோட தாமதமாகிறது. இதன் காரணமாக சில விவசாயிகள் தங்கள் பொருட்களை அன்றே விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், முதல்நாள் தானியங்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள், மறுநாள் கொள்முதல் செய்ய வர இயலாத நிலையும் ஏற்படுகிறது. இதன்காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இரவு நேரங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு உள்ளே தானியங்களை எடுத்து வர விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். வாகனங்களை சோதனை செய்யும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது. வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்த எள், கடலை, சோளம் உள்ளிட்ட தானிய பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago