வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், உட்பட்டவர்கள் என வகைப்படுத்தி பரிசோதனை செய்த பிறகே சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம், குடியாத்தம் அபிராமி மகளிர் கல்லூரியில் கரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. விஐடியில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது. இங்கு. 45 வயதுக்கு உட்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு உட்பட்ட கரோனா தொற்றாளர்கள் அனைவரும் இனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படா மல், விஐடி யில் உள்ள கரோனா நல மையத்துக்கு மட்டுமே கொண்டு செல்லப்படுவர். அங்கு பரிசோ தனை செய்யப்பட்டு உடல்நிலை யின் அடிப்படையில், மருத்துவர் களால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள்.
அதேபோல், 45 வயதுக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படுவார்கள். பரிசோதனையில் மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். மேல்சிகிச்சை தேவைப்படாத நபர்களை அன்றைய தினமே அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை யில் அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோன்று கரோனா தொற்றாளர்கள் தாங்களாகவே ஆட்டோ, டாக்ஸிக்களில் மருத்துவமனைக்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்தந்த ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கும் தொற்று பரவுவதோடு மட்டுமல்லாமல், அன்றைய தினம் அந்த வாகனங்களில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.
எனவே, கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸைத் தொடர்பு கொண்டு அதன் மூலம் மட்டுமே செல்ல வேண்டும். இந்த நடைமுறை உடனே அமலுக்கு வருகிறது. கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்கள் அனைவர்களின் பயன்பாட்டுக்காக பக்கெட், பிளாஸ்டிக் கப், பேஸ்ட், பிரஷ், சோப், சானிடைசர், படுக்கை விரிப்பு, தலையணை உறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கோவிட் பெட்டகம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவ மனைகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த கோவிட் பெட்டகம் வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago