சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம், குமாரபாளையத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிறுமியின் தாயார், பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர் உள்பட 13 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று குமாரபாளையத்தில் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் ஆணையக்குழு உறுப்பினர் வி.ராம்ராஜ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்த திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது உறுப்பினர் வி.ராம்ராஜ் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை யாராவது மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு தொடுப்பதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் காவல்துறை வைத்துள்ளது.
வழக்கின் மீதான குற்றப்பத்திரிக்கை ஒரு வார காலத்தில் தாக்கல் செய்யப்படும் என காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எதிர் கருத்துகளை சொல்வது சகஜம் தான்.
குற்றம் சாட்டப்பட்டவர்களது குற்றத்தை நிரூபித்து கடும் தண்டனை பெற்றுத் தரப்படும். வழக்கு நிரூபிக்கப் பட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
விசாரணையின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதப்பிரியா மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago