திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் - ஆக்சிஜன் வசதியுடன் 350-க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுமருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 350-க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சி, ஆவடி மாநகராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகள் உள்ளிட்ட சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆகவே, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் கரோனாதடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், திருவேற்காடு நகராட்சியில் உள்ள 5 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் 4 சிறப்புமருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 400 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. 45 வயதை கடந்த 200 பேருக்கு தடுப்பூசி போடும்பணி நடைபெற்று வருகிறது.

தயக்கம் வேண்டாம்

இந்நிலையில், திருவேற்காடு, தேவி நகர், 2-வது தெருவில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில், கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாமில் சளி மாதிரிகள் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை நேற்று ஆட்சியர் பொன்னையா, ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வின்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) வரை 2,555 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,869 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் கோவிட் கேர் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 350-க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 75 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் உள்ளன.

மாவட்டத்தில், கரோனா தடுப்பூசியை முதல் தவணையாக 1.61 லட்சம் பேரும், 2-ம் தவணையாக 34 ஆயிரம் பேரும் போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மாவட்டத்தில் யாருக்கும் எவ்விதபக்க விளைவுகளும் ஏற்படவில்லை. ஆகவே, பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், திருவேற்காடு நகராட்சி ஆணையர் எம்.ஆர்.வசந்தி, சுகாதார ஆய்வாளர் எஸ்.ஆல்பர்ட் அருள்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்