கரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், கடந்த முறை போல அவதிப்பட நேரிடுமோ என்ற அச்சத்தில் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணி, ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ரயில்களில் கூட்டம் கூட்டமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கட்டுமானப் பணி உள்ளிட்ட தொழில்களில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,``இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. மாநில அரசுகளும் ஊரடங்கை கடைசி ஆயுதமாக வைத்துக் கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வேலைபார்க்கும் மாநிலங்களை விட்டு வெளியேற வேண்டாம். அங்கேயே கரோனா பரவலைத் தடுக்கவும், கரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் புலம்பெயராமல் தக்க வைத்துக் கொள்ள ‘கிரெடாய்’ (இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு) உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கிரெடாய் சென்னை பிரிவு முன்னாள் தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப் கூறும்போது, “கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழில் நிறுவன அலுவலகத்தில் பணிபுரிவோர், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஆகியோருக்காக பிரத்யேக கரோனா மருத்துவமனைகளை உருவாக்க கிரெடாய் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள குடியிருப்புகளில் போதிய அளவு ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர், படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருடன் கூடிய பிரத்யேக கரோனா மருத்துவமனைகளை உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன'' என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago