புதுக்கோட்டை அருகே - அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட மக்கள் எதிர்ப்பு : வாகனங்கள் சிறைபிடிப்பு, சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்ததுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

குளத்தூர் வட்டம் வெள்ளனூர் ஊராட்சி வடசேரிப்பட்டியில் உள்ள அரசு இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 528 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அர சாணை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரும் விடப்பட்டது.

இதையடுத்து, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக பொக்லைன் இயந்திரங்களும், லாரிகளும் வடசேரிப் பட்டிக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. இதையறிந்த, அந்தப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு, கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களுக்கு பயனில்லாத இந்த திட்டத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் திட்டமிட்டு கொண்டுவந்ததாகக் கூறி அவருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.

இதையடுத்து, இலுப்பூர் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுத பாணி, டிஎஸ்பிக்கள் கீரனூர் சுப்பிரமணியன், புதுக்கோட்டை செந்தில்குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை பொதுமக்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE