கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க - மருத்துவர், செவிலியர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை :

கரோனா தொற்றாளர்களுக்கு உரிய வகையில் சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதுடன், மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் களையும் கூடுதலாக நியமிக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் தலைமையில் கரூர் சுங்கவாயிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.தர், மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இலக்குவன், எம்.ஜோதிபாசு, பி.ராஜூ, கே.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கரோனா தொற்று கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-ம் தவணை ஊசி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

குறிப்பாக, கோவாக்சின் தடுப்பூசி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் போடப்படுகிறது. இதை தட்டுப்பாடின்றி அனைவருக்கும், அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைப்பதற்கு மாவட்ட சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்றாளர்களுக்கு உரிய வகையில் சிகிச்சை கிடைக்க கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். கரோனா தொற்று காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டு கொண்டிருக்கும் சூழலில், கரூர் நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, குப்பை வரிகளை செலுத்த மக்களை வற்புறுத்தி வருகின்றது.

கரோனா தொற்று காலத்தில் கரூர் நகராட்சி நிர்வாகம் வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும் குடிநீர் வரி கட்டவில்லை என்றால், குடிநீர் இணைப்பை துண்டிக்கும் முடிவை கைவிட வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் அடாவடித்தனம் தொடர்ந்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை திரட்டி கரூர் நகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன குரல் எழுப்புவோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE