தபால் வாக்கு எண்ணிக்கைக்கு தனியறை : நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகளை எண்ண தனியறை அமைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணியின்போது தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தபால் வாக்கு எண்ணுவதற்காக தனியறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் 4 மேசைகளில் தபால் வாக்குகள் எண்ணும் பணி மேற்கொள்ளப்படும். ஒரு மேசையில் சர்வீஸ் ஓட்டர்ஸ் என அழைக்கப்படும் ராணுவத்தில் பணிபுரிவோர்களுக்கான தபால் வாக்குகள் எண்ணப்படும்.

இதன்பின்னர், பொதுவான தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியர் நிலையில் ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் பணியில் ஈடுபடுவர்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தபால் வாக்கினை பிரித்து உறுதிமொழி படிவத்தில் இடம்பெற வேண்டிய விவரங்கள் சரியாக உள்ளனவா என்ற அப்படையில் தபால் வாக்கு எண்ணும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

தபால் வாக்கினை வாக்களிப்பவர் உரிய முறையில் வாக்களித்துள்ளாரா என்பதை அரசியல் கட்சியினரின் முகவர் களுக்கு காண்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்