முருகன் பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு - தலைவர் உட்பட 5 பேர் தகுதி நீக்கம் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தற்போது அந்தக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் 2017-18-ம்ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கையில் அந்தப் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் அளவுக்கு முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று சில அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் ஆனந்த் (பொறுப்பு) வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 2017-18-ம் ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை மற்றும் சங்கத்தின் 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பரிவு 81 விசாரணை அறிக்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு தனது கடமையை கடைபிடிக்கத் தவறியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் சங்கத்தில் கவனக் குறைவாக செயல்பட்டு சங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நிதியிழப்பையும் கண்டறிய தவறியுள்ளது. இதைத் தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநரின் உத்தரவின்படி சங்கத்தின் நிர்வாகக் குழு தலைவர் வீ.வள்ளிநாயகம், நிர்வாக குழு துணைத் தலைவர் எஸ்.ஜெயந்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ்.கீதா, பி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.இளங்கோவன் ஆகிய 5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தகுதியிழப்பு செய்யப்பட்ட நாள் முதல் இந்த சங்கத்திலும், பதிவு பெற்ற எந்த கூட்டுறவு சங்கத்திலும் நிர்வாக் குழு உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் செல்வோம்: வள்ளிநாயகம்

முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் இதுவரை நிர்வாகக் குழு தலைவராக இருந்த வள்ளிநாயகம் கூறும்போது, “எங்கள் மீது எந்தத் தவறும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பணியாற்றிய ஓர் அலுவலரின் தவறான தூண்டுதலால் இது செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றம் சென்று எங்கள் நியாயத்தை எடுத்து சொல்வோம். தகுதி நீக்கம் செயய்பப்பட்ட இந்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்