செங்கை மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, 8 வட்டங்களுக்கு துணை ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல், தொற்று உறுதிசெய்யப்படுபவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தல், தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதல், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதியைத் தனிமைப்படுத்துதல், அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தடுப்புப் பணியை மேற்கொள்ளுதல், கரோனா தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளை தீவிரமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிறப்பு கவனம்
இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்தவும், தடுப்பு பணிகளைக் கண்காணிக்கவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்கள் வாரியாக துணை ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.கரோனா பரவலைத் தடுக்க,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்பு,காவல் துறை, சுகாதாரத் துறைஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தாம்பரம் வட்டத்துக்கு தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், செங்கல்பட்டு வட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு தனி துணை ஆட்சியர் ஆ. ஜெயதீபன், திருப்போரூர் வட்டத்துக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) சுப்பிரமணி, பல்லாவரம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் லலிதா, வண்டலூர் வட்டத்துக்கு செங்கல்பட்டு கலால் உதவி ஆணையர் லட்சுமணன், மதுராந்தகம் வட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, செய்யூர் வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சீதா ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago