திருப்பத்தூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் 95 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 8,745-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் போக 658 பேர் அரசு மருத்துவ மனைகளிலும், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்றாம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் தெருவில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு சுகாதாரத்துறையினர் தொற்று தடுப்புப்பணிகளை மேற்கொண்டனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேரும் நாட்றாம்பள்ளி கரோனா சித்த சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, காமராஜ் தெருவில் தடுப்புகள் அமைத்து அங்குள்ளவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்றாம்பள்ளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் வரை அப்பகுதியில் வசிப்போர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல, ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட மாதனூர், ரெட்டித்தோப்பு, கஸ்பா, அகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 49 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் ஆம்பூர் நகராட்சி மற்றும் மாதனூர் ஒன்றிய நிர்வாகம் சார்பில் நோய் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளிலும் நோய் பரவல் அதிகரித்து வரும் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவ முகாமை நடத்தி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 5.36 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 179 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 30 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் 2,807 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் அதை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவப் பரிசோதனைகளை அதிகரித்து, கரோனா தடுப்பூசி முகாம் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால் அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்