நாமக்கல்லில் கரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எஸ். மதுமதி ஆய்வு மேற்கொண்டார். இதன்படி ராசிபுரத்தில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையம், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி, காய்ச்சல் முகாம் ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலர் மதுமதி பார்வையிட்டார்.

மேலும், பிள்ளாநல்லூர் வட்டார சுகாதார நிலையம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றையும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் மதுமதி பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் நடவடிக்கைகள் காரணமாக கரோனா தொற்று பரவல் குறைவாக உள்ளது. ஒவ்வொரு அலுவலரும் கரோனா தொற்று தடுப்பு பணிகளில் தங்களுக்கான கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ளவேண்டும். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை மீண்டும், மீண்டும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும், என்றார்.

மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்