நாமக்கல்லில் இதுவரை 1.13 லட்சம் பேருக்கு தடுப்பூசிமாவட்ட ஆட்சியர் தகவல் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 139 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலருமான எஸ்.மதுமதி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு முதல் இம்மாதம் 19-ம் தேதி வரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 814 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதன் மூலம் 13 ஆயிரத்து 344 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தொடர் நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை மூலமாக 12,429 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன். இதுவரை 111 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோர் என 1 லட்சத்து 13 ஆயிரத்து 139 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,235 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. 6 இடங்களில் கரோனா தொற்று பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 27 பகுதிகளில் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தொடர்பாக ரூ. 22 லட்சத்து 12 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்