சுற்றுலா பயணிகளுக்கு தடை எதிரொலியாக - குற்றாலம் அருவிகள், திருச்செந்தூர், கன்னியாகுமரி கடற்கரைகள் வெறிச்சோடின :

By செய்திப்பிரிவு

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் குற்றாலம் வெறிச்சோடியது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு சாரல் காலம் முழுவதும் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், சுற்றுலாப் பயணிகளை நம்பி பல்வேறு தொழில் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது.

அருவிகள் வறண்டன

குற்றாலம் மலைப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அருவிகளில் நீர் வரத்து இருந்தது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பனிக்காலத்திலும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுட்டெரிக்கும் கோடைக் காலத் திலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் குற்றாலம் அருவிகள் வறண்டு கிடக்கின்றன. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் மட்டும் பாறையை ஒட்டியபடி சிறிதளவு நீர் கசிந்து வருகிறது.

அருவிகளுக்கு செல்ல தடை

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அரசு உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் சுற்றுலாத் தலமான குற்றாலம் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணி முத்தாறு அணைப்பகுதிகள், உவரி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், வ.உ.சி. மணிமண்டபம், ஒண்டிவீரன் மணிமண்டபம் உள்ளிட்ட நினைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்லவும், தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக சென்று குளிக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

நாகர்கோவில்

கன்னியாகுமரியில் சுற்றுலா மையங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இருந்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை படகுகள் இயக்கப்படாது என, நுழைவு வாயிலில் அறிவிப்பு வைக்கப்பட்டு, படகு இல்லம் மூடப்பட்டது. மேலும் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரிகோட்டை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன. நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள ராமசாமி ஐயர் நினைவு பூங்கா மூடப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை மட்டும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், திறக்கப்பட்டிருந்தது. அங்கு மட்டும் சுற்றுலா பயணி களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையை பார்வையிட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. தூத்துக்குடியில் அமைந்துள்ள புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா ஆகிய கடற்கரை பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடி நோட்டீஸ் ஒட்டினர்.

திருச்செந்தூர் கடற்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் திருச்செந்தூர் கடற்கரை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதியில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று மிகவும் குறைவாகவே இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்