கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஓரிரு தினங்களில் தீர்க்கப்படும் : செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையினர் தகவல்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்ளவந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த தடுப்பூசி தட்டுப்பாடு ஓரிரு தினங்களில் தீர்க்கப்பட்டு தடுப்பூசி பணி தொய்வின்றி நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுகொள்ளலாம் என அரசு அறிவித்தது. அதற்காக சிறப்பு முகாம்களும் நடந்து வருகின்றன. இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதார துறை சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை சிறப்பு முகாம்கள், சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்ள வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதன் காரணமாக வெகு தூரத்தில் இருந்து வந்தவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமும் 9 ஆயிரம் பேர்

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கரோனா தடுப்பூசி இருப்பு நேற்று முன்தினம் மாலை காலியாகிவிட்டது. அதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடமுடியாத நிலை ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 7.5 லட்சம் பேர் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தினமும் 9,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், ஐ.டி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசி தட்டுப்பாடு ஓரிரு தினங்களில் தீர்க்கப்பட்டு தடுப்பூசி பணி தொய்வின்றி நடைபெறும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்