சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடக்கரை சாலை சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் 50 கிராம மக்கள் உள்ளனர்.
கடலூர் மாவட்ட எல்லைபகுதிக்கு உட்பட்ட கொள்ளிடக்கரை சாலை சிதம்பரம் அருகேஉள்ள சின்னகாரமேடு முதல் அணைக்கரை வரை சுமார் 60 கிலோ மீட்டர் உள்ளது. இந்தசாலையையொட்டி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை ரூ. 108 கோடியில் சீரமைக்கப்பட்டது. மண் சாலையாக இருந்த கொள்ளிடக்கரை சாலை தார் சாலையாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிகள் செய்யப்படாததால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த கொள்ளிடக்கரை சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. சாலைகளில் பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டன. பல இடங்களில் கருங்கல் ஜல்லி பெயர்த்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தீத்துக்குடி, கருப்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இக்கிராம மக்கள் குமராட்சி சென்று சுற்றிக் கொண்டு சிதம்பரம் சென்று வருகின்றனர். இந்த சாலையில் 2 தனியார் மினி பேருந்துகள் சென்று வந்தன. அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாலையை முழுமையாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 50 கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago