திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு - அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் : காவல் துறையினர் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுபூங்குளம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தாலும், காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுபூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்மண புதூர் கிராமத்தில் மின் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த 1 மாதத் துக்கு மேலாக குடிநீர் வழங்கப் படவில்லை எனக்கூறப்படுகிறது. தற்போது, கோடை காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து குடிநீர் தேடி அப்பகுதி மக்கள் நீண்ட தொலைவுக்கு அலைந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர் - ஜம்மணபுதூர் பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக திருப்பத்தூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி நிர்வாகத்திடம் கலந்து பேசி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனுமதியின்றி ஒரே இடத்தில் பொதுமக்கள் கூட தடை இருப்பதால் தேவையில்லாமல் மறியலில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து, மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்