செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 வயதுக்கும் மேற்பட்ட 7.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜன. 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் தயக்கம் காட்டினர். தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவுவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றையும் அதனால் ஏற்படும் இறப்புகளையும் தடுக்கும் பொருட்டு கடந்த 12-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த சுகாதாரத் துறையினருக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 7.5 லட்சம் பேர் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தினமும் 9,000பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 1,94,004 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
145 இடங்களில் தடுப்பூசி
இதுதவிர, அதிக அளவிலான ஊழியர்கள் பணிபுரியும் கடைகள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்பு போன்ற பகுதியில் நேரிடையாகச் சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என 145 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.கோவாக்சின், கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகளும், மாவட்ட நிர்வாகத்திடம், போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தங்களது ஆதார் கார்டு நகலை சமர்ப்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
தனியார் மருத்துவமனையிலும்..
மேலும், அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில் ரூ.250 பணம் செலுத்தியும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நகராட்சி பகுதியில் கரோனா தொற்றுஅதிகரித்துள்ளதால் அங்குசிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள், தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago