திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரோனாவுக்கு தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பிஹார், ஜார்கன்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் 7 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்று கண்டறியப்பட்டது.
“திருநெல்வேலி மாவட்டத்துக்கு 3 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. மேலும் 3 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. தேவையான அளவுக்கு தடுப்பூசி இருப்பு உள்ளது”. இதைத் தொடர்ந்து மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம் நடத்தி பரிசோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 18,520 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 91 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16,645 ஆக உள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
3 ஆயிரம் டோஸ் தடுப்பூசி
இதற்கிடையே பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. தடுப்பூசி போட வந்தவர்கள் பலர் மறு நாள் வருமாறு கூறி திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “திருநெல்வேலி மாவட்டத்துக்கு 3 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. மேலும் 3 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. தேவையான அளவுக்கு தடுப்பூசி இருப்பு உள்ளது” என்றார்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 166 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 981 பரிசோதனைகள் செய்யப்பட்டன.இதில், ஆலங்குளம் ஒன்றியத்தில் 16 பேர், கடையம் ஒன்றியத்தில் 6 பேர், கடையநல்லூர் ஒன்றியத்தில் 13 பேர், கீழப்பாவூர் ஒன்றியத்தில் 4 பேர், குருவிகுளம் ஒன்றியத்தில் 15 பேர், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 15 பேர், செங்கோட்டை ஒன்றியத்தில் 23 பேர், தென்காசி ஒன்றியத்தில் 29 பேர், வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 14 பேர் என மொத்தம் 125 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,634 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 14 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,793 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
ரூ.46 ஆயிரம் அபராதம் வசூல்
தென்காசி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாததால் நேற்று 230 பேரிடம் இருந்து 46 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.மாவட்டம் முழுவதும் இதுவரை நடைபெற்ற சோதனையில் முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகள் மீறல் தொடர்பாக 44 லட்சத்து 29 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 252 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,520 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 90 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,645 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 1,730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை கரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளி்ல 152 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கரோனா பரவலை தடுக்கும் வகையில் வீடு ,வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 152 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கிராமம், கிராமமாக சளி பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் இறங்கியுள்ளனர்.
காய்ச்சல் பரிசோதனை
நாகர்கோவில் மாநராட்சி பகுதிகளில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை செய்து, கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தீவிரப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று வடசேரி பகுதியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பாதிப்பு கண்டறியப்பட்ட வல்லன்குமார விளை, வடசேரி புதுத்தெரு ஆகியவை சீல் வைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் உள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் இதுவரை 18,374 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 351 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த 36,355 பேரிடமிருந்து 68 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் பிற இடங்களில் களப்பணியாளர்கள் மூலம் இதுவரை மொத்தம் 5,02,405 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் தொற்றால் இதுவரை 18,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா நோய் தடுப்பூசி முதல்கட்டமாக 77,686 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 10,904 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை மொத்தம் 36,355 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.68,89,926 வசூலிக்கப்பட்டுள்ளது. நோய்தொற்று அறிகுறிகள் தோன்றியவுடன் பொதுமக்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கரோனா அறிகுறிகள் தென்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள தாமதமானால் நுரையீரல் பாதிப்படைந்து அபாயகட்டத்தை எட்டும் சூழல் நிலவும். எனவே, பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago