திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீரராகவப் பெருமாள் கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.
ஆனால், நடப்பாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக, தடுப்பு நடவடிக்கைகளுடன், எளிமையான முறையில் இத்திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, சித்திரை பிரமோற்சவம் விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தங்க சப்பரத்தில் தேவி, பூதேவி உடனுறை வீரராகவப் பெருமாள், கோயில் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சிம்ம வாகனத்தில் கோயில் உட்பிரகார உலா நடைபெற்றது.
வரும் 27-ம் தேதி வரை எளிமையாக நடைபெற உள்ள பிரமோற்சவ விழாவையொட்டி, வழக்கமாக தினசரி நடைபெறும் வீரராகவப் பெருமாள் வீதியுலா, தேர்த் திருவிழா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மாறாக தினசரி காலை, இரவு நேரங்களில், பல்வேறு வாகனங்களில் கோயில் உட்பிரகார உலா மட்டும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago