திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்கும் பணியில் திமுகவினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேவைத் தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு சென்று வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப் பட்டுள்ளன.
திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் ஆரணி அடுத்த தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில வாக்குகள் எண்ணும் மையங்களில் ‘கண்டெய்னர் லாரி வருகை, மடிக்கணினியுடன் வல்லுநர்கள் வருகை’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, தி.மலை மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்கும் பணியில் திமுக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. வெளியாட்கள் நடமாட்டம், சர்ச்சைக்குரிய வாகனங்கள் வருகை, மின்னணு இயந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறை கதவில் வைக்கப்பட்டுள்ள சீலின் தடயம் மாறாமல் உள்ளதா? என்பது கண்காணிக்கப்படுகிறது. இதேபோல், அதிமுகவும் தனது வழக்கமான பணியை செய்கிறது. பிற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளும் கண்டுகொள்ளவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago