45 வயதுக்கு மேற்பட்ட - தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்த வேண்டும் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும், 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை அந்தந்த தொழிற்சாலைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தாக்கம் வேகமாகப் பரவும் சூழலில்,45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். எனவே, 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களும் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக, தொழிற்பேட்டைகள், தொழிற்சாலைகள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும், தங்களிடம் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட தொழில் மையம், சிட்கோ, சிப்காட் திட்ட அதிகாரிகள், சுகாதாரத் துறையுடன் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 சதவீதம் இலக்கை அடைய அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகளில் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்